

சென்னை: பெருங்குடி - வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க செயின்களை பறித்த இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
திருவான்மியூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்குடி - வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் அடிக்கடி நடைபெற்றது.
இது தொடர்பாக, 6 வழக்குகளை பதிவு செய்து, குற்றவாளியை ரயில்வே போலீஸார் தேடி வந்தனர். மேலும், ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் கவினா தலைமையில் காவல் ஆய்வாளர் சி.சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் குமுதா, ஹரிதாஸ் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீஸார் தீவிர புலனாய்வு மேற்கொண்டு, 6 குற்ற வழக்குகளில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்த விஜயராகவன் (26) என்பவரை பெருங்குடியில் கைது செய்தனர்.
போலீஸாருக்கு பாராட்டு
அவரிடம் இருந்து மொத்தம் 16 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர்.