

சென்னை: பி.எம்.டபிள்யூ காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். ஆலந்தூர் ஹாஜி தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா நஜிமுதீன் (42).
இவர் பழைய கார்களை விற்பனை செய்கிறார். இவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் கார்களை வாங்கும் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஹாஜா நஜிமுதீன் தனது பிஎம்டபிள்யூ காரை ரூ.10 லட்சத்துக்கு கார்த்திகேயனிடம் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்தை கார்த்திகேயன் கொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி பிஎம்டபிள்யூ காரை கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். மீத முள்ள ரூ.9 லட்சத்தை பின்னர் தருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால், பலமுறை கேட்டும் மீதமுள்ள பணத்தை கார்த்திகேயன் கொடுக்கவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த ஹாஜா நஜிமுதீன், செல்போன் செயலி மூலம் தனது காரின் இருப்பிடத்தைக் கண்காணித்தார். பின்னர் ஆரணி பகுதிக்குச் சென்று விசாரித்தபோது, அந்த காரை கார்த்திகேயன், விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.
தன்னை ஏமாற்றியது தொடர்பாக ஹாஜா நஜிமுதீன் புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை என தெரியவந்ததைத் தொடர்ந்து, கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், ஆரணி பகுதியில் இருந்து ஹாஜா நஜிமுதீனின் பி.எம்.டபிள்யூ. கார் மீட்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், ‘கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மீது ஏற்கெனவே 4 மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.