

திருநெல்வேலி: பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் லட்சுமணன் (15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரிராஜன் (23). மாரியப்பன் மற்றும் ரத்தினவடிவேல் குடும்பத்தினர் உறவினர்கள்போல் பழகி வந்தனர். இதனால் லட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் சென்று விளையாடுவது வழக்கம்.
கடந்த 5-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த லட்சுமணனை, சபரிராஜன் அழைத்துள்ளார். இதையடுத்து, லட்சுமணன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சபரிராஜன் திடீரென்று ஆத்திரமடைந்து, அரிவாளால் லட்சுமணனை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் உயிருக்குப் போராடினார். பணகுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பணகுடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சபரிராஜனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.