

திருப்பூர்: மூன்று கொலைகள் செய்த தொழிலாளிக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (35). இவர் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்கிற சங்கர் (36) வேலை செய்து வந்தார். குடிபோதை காரணமாக அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது.
கல்லால் தாக்கி கொலை: கடந்த 2018 மார்ச் 4-ம் தேதி இரவு நிறுவன வளாகத்தில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், கல்லால் கணேசனின் தலையில் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவரது உடலை அங்குள்ள குப்பை மேட்டில் வீசிவிட்டு தப்பினார். இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.
இதேபோல, திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் 2020-ல் ஆனந்த் மற்றும் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த இளம்பரிதி (32) ஆகியோர் வேலை செய்தனர். அப்போது அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்த அங்கேரிப்பாளையம் அன்பரசு(39) என்பவரை முன்விரோதம் காரணமாக 2020 அக். 12-ம் தேதி இளம்பரிதி, ஆனந்த் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளம்பரிதி, ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும், 2020 நவ. 1-ம் தேதி திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி இசக்கிமுத்து (35) என்பவரையும் ஆனந்த் கொலை செய்தார். இந்த 3 கொலை வழக்குகளும் திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றன.
வழக்கை விசாரித்த நீதிபதி தர், குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்துக்கு மூன்று கொலை வழக்குகளுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் 3 ஆயுள் தண்டனையும், இளம்பரிதிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து,ஆனந்த் மற்றும் இளம்பரிதி ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 3 வழக்குகளிலும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பூமதி ஆஜரானார்.