

தண்ணீர் தொட்டியில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீஸார். படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம்: சேலத்தில் பெண்ணை 7 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் உடல் பாகங்களை மூட்டைகளில் கட்டி மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். குடிநீர் குழாயை திறந்தபோது தண்ணீர் துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த அவர் மொட்டை மாடி சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தார். அங்கு கிடந்த பிளாஸ்டிக் மூட்டை கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் இருந்தன. மற்றொரு தொட்டியிலும் ஒரு மூட்டை கிடந்தது.
உடனே இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் மூட்டைகளை மீட்டனர். ஒரு மூட்டையில் கை, கால்களும், மற்றொன்றில் தலை மற்றும் மார்புபகுதியும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன. மேலும், அருகே வசித்து வரும் சீனிவாசன் என்பவரது வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் இருந்த மூட்டையில் பெண்ணின் இடுப்பு உள்ளிட்ட பாகங்கள் இருந்தன. மொத்தம் 7 துண்டாக பெண்ணின் உடல் பாகங்கள் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தன.
மோப்ப நாய் ஜூலி மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் “கணபதி” என்ற பெயருடன் விநாயகர் பச்சை குத்தப்பட்டுள்ளது.
அந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இதுகுறித்து அருகே வசிக்கும் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சேலம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் தனது மனைவி தங்கமணியை (50) காணவில்லை என வீராணம் போலீஸில் புகார் செய்துள்ளார். கொலையான பெண் இவராக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.