

கைது செய்யப்பட்ட கணேச பெருமாள், சிவபிரசாந்த்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வழியாக சித்தூரில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக சேத்துப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீஸார், சேத்துப்பட்டில் உள்ள நான்கு முனை சந்திப்பில் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே, பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்தகாரை போலீஸார் தடுத்து நிறுத்தமுயன்றபோது, அவர்களை இடித்து தள்ளிவிட்டு, கார் வேகமாகச் சென்றது. உடனே இதுகுறித்து எஸ்.ஐ. லதாவுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஏற்கெனவே, நான்குமுனை சந்திப்பில் தயாராக இருந்த எஸ்.ஐ.லதா, அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் அவர் மீது மோதுவதுபோல் அதிவேகமாக வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த லதா, சற்று விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்தக் கார் வந்தவாசி சாலையில் திரும்பிச் சென்றது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்திச்சென்று பழம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வேகத்தடை அருகே காரை மடக்கி, அதில் இருந்த 2 பேரைப் பிடித்தனர். காரைப் பின்தொடர்ந்து வந்த இன்ஸ்பெக்டர் குணபாலன், எஸ்.ஐ. லதா ஆகியோரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, குட்கா பொருள்களைக் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கணேசபெருமாள் (46), சிவபிரசாந்த் (30) ஆகியோரைக் கைது செய்து, காரில் இருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 285 கிலோ குட்கா பொருட் களைப் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.