

சென்னை: சென்னை - அமைந்தகரை, அய்யாவு காலனி லட்சுமி அம்மன் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரவீன் (29). இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு தாரிணி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஷ்ரேயா என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளார். மேலும் பிரவீன் தனது மனைவி, குழந்தை மற்றும் தாய் ராதிகா, மாமியார் வீணா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பிரவீன் கடைக்கு சென்று விட்ட நிலையில், மாலை ராதிகா தனது மகள் காவ்யா என் பவருக்கு வயிற்று வலி என்பதால் அவரை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து இரவு 7 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த ராதிகா, மருமகள் அறைக்கு சென்று பார்த்த போது தாரிணி தூக்கில் தொங்கிய நிலையிலும் குழந்தை ஷ்ரேயா தரையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ராதிகாவின் அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த வீணா, அறையில் தாரிணி தூக்கில் தொங்கியபடி இருப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாரிணி மற்றும் குழந்தை ஷ்ரேயாவை மீட்டு பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிரவீன் தன் நண்பருடன் விரைந்து சென்று மனைவி மற்றும் குழந்தையை சிகிச்சைக்காக அமைந் தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தாரிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பின்னர் தாரிணி, குழந்தை ஷ்ரேயா இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட தாரிணி சிறு வயது முதலே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குழந்தை பிறந்த பின் மன அழுத்தம் அதிகமாகி அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை ஷ்ரேயாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தாரிணி உண்மையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இந்த விபரீத முடிவை மேற்கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என பல கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.