

சென்னை: திருவொற்றியூர் மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம், சிறுவர்கள் விளையாடும் ரூ.500 டம்மி நோட்டைக் கொடுத்து ஏமாற்றி, பழம் வாங்கிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (66) என்ற மூதாட்டி, சென்னை, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி, அவரிடம் ஒரு பெண் ரூ.200க்கு மாம்பழம் வாங்கிக் கொண்டு ரூ.500 நோட்டை கொடுத்தார். அதனை உண்மை என நம்பிய மூதாட்டி, மீதம் ரூ.300-ஐ திருப்பிக் கொடுத்துள்ளார். பெண் சென்ற பிறகு நோட்டைச் சோதிந்த போது, அது சிறுவர்கள் விளையாடும் டம்மி ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, திருவொற்றியூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, மூதாட்டியை ஏமாற்றிய எரணாவூரைச் சேர்ந்த பாக்கிய லட்சுமி (35) என்பவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாக்கியலட்சுமி போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், 'தனது மகன் விளையாடிக் கொண்டிருந்த டம்மி நோட்டை எடுத்து தனது மணிபரஸில் வைத்து விட்டதாகவும், பர்ஸில் இருந்த ஒரிஜினல் ரூ.500 நோட்டுடன் இந்த டம்மி நோட்டும் கலந்திருந்ததை கவனிக்காமல், தெரியாமல் கொடுத்துவிட்டதாகவும்' அவர் கூறியுள்ளார். பாக்கியலட்சுமியின் விளக்கத்தைத் தொடர்ந்து, போலீஸார் சட்டப்படியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.