

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம் எலுமிச்சனஅள்ளி வனப்பகுதியில் இருந்து வனத்துறையால் மீட்கப்பட்ட அவிட்டுக் காய் நாட்டு வெடிகள்.
தருமபுரி: ‘அவிட்டுக் காய்’ வெடி தயாரிப்பை முற்றிலும் ஒடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உட்பட 8 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களில் முயல், மான், காட்டுப்பன்றி, நரி, காட்டெருமை, கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில் சில விலங்குகள் இன்றளவும் வேட்டைக்காரர்களின் இலக்காக உள்ளன.
வனத்துறை சார்பில் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டபோதும் அவ்வப்போது வேட்டைக்கும்பலின் அத்துமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
குறிப்பாக இந்த கும்பல், ‘அவிட்டுக் காய்’ எனப்படும் நாட்டுவெடிகளை வேட்டைக்காக பயன்படுத்தி வருகின்றன. மிகவும் ஆபத்து நிறைந்த இந்த அவிட்டுக் காய் வெடி கலாச்சாரத்தை முழுவதுமாக ஒழிக்க காவல்துறை தலையிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ‘அவிட்டுக் காய்’ வெடி என்பது, பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் வெடி மருந்தை பயன்படுத்தி தயாரிக்கும் ஒருவகை நாட்டுவெடி ஆகும்.
சிறுசிறு உருண்டைகளாக இந்த வெடிகளை தயாரிக்கும் வேட்டைக் கும்பல், வன விலங்குகள் நடமாடும் பகுதியில் இவற்றை ஆங்காங்கே வைத்துச் செல்கின்றனர். இந்த வெடிகள், பார்வைக்கு உணவுப்பொருள் உருண்டை போன்று தோற்றமளிக்கும்.
இதை வன விலங்குகள் வாயில் கவ்வி மெல்லும்போது வெடித்து விலங்கின் முகம் முழுவதும் சிதைந்து விலங்குகள் செயலற்று சுருண்டு விழும். அருகில் மறைந்திருக்கும் வேட்டை கும்பல் உடனே விலங்கின் உடலை இறைச்சித் தேவைக்காக எடுத்துச் செல்வர்.
வனப்பகுதியிலும், வனத்தையொட்டிய விளைநிலங்களிலும் இவ்வாறு அவிட்டுக் காய் வெடிகளை வைக்கும் வேட்டை கும்பல் சில நேரங்களில் அவற்றை அப்படியே விட்டுச் செல்வதும் உண்டு.
இவ்வாறு விடப்படும் அவிட்டுக் காய்களை, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் எடுத்து மென்று முகம் சிதறி உயிரிழந்த சம்பவங்களும் உண்டும். அலட்சியமாக விடப்படும் இவ்வகை வெடிகளில் குழந்தைகள் உட்பட மனிதர்களும் சிக்கி உயிரிழக்கவும் வாய்ப்புண்டு.
கடந்த டிசம்பர் மாதம் பாலக்கோடு வனச்சரகத்தில் எலுமிச்சனஅள்ளி அருகே வனப்பகுதியில் விலங்கு வேட்டைக்காக அவிட்டுக் காய் வெடிகளை வைத்த 2 வேட்டை நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, இரு வாரங்களுக்கு முன்பு பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பகுதியில் செல்லமுடி தளவாய் காடு என்ற இடத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு, காட்டுப்பன்றி வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த அவிட்டுக்காய் வெடியை கடித்து முகம் சிதறியது.
இந்த அவிட்டுக் காய் வெடி விவகாரத்தில், வன எல்லைக்குள் நடமாடும் வேட்டை கும்பல் மீது மட்டும் தான் வனத் துறை யால் நடவடிக்கை எடுக்க முடியும்.
வனத்தை யொட்டிய அரசு புறம்போக்கு நிலங்களிலும், பட்டா நிலங்களிலும் இவ்வகை வெடிகளை வேட்டைக்கு பயன்படுத்துவோர் மீது வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சூழல்களிலும் அவிட்டுக் காய் வெடி கும்பல் மீது காவல் துறையால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
மேலும், அவிட்டுக் காய் வெடிக்கான மூலப்பொருளான வெடிமருந்துகள் நடமாட்டத்தை தடுப்பதன் மூலமும் இவ்வகை வெடிகள் தயாரிப்பை முழுமையாக தடுக்க முடியும். எனவே, பல வகைகளிலும் ஆபத்து நிறைந்த அவிட்டுக் காய் வெடி கலாச்சாரத்தை ஒழிக்க, காவல்துறை மூலம் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.