

கொலையான குமார், கைதான ரம்யா.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவரை வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இளைய நகரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் விவசாயி குமார்(43). இவரது மனைவி ரம்யா(35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் வீட்டுக்கு வந்த குமார், ரம்யாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால், ஆவேசமடைந்த ரம்யா வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்து, மார்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.
இதில், சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை உறுதி செய்த ரம்யா உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு சென்று அங்கு சரணடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையிலான போலீஸார் ரம்யா வீட்டுக்கு சென்று அங்கிருந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர். இதற்கிடையே, கொலை நடந்த இடத்தை திருப்பத்தூர் எஸ்.பி., அக்சய் அனில் வாகரே நேற்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.