கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை
Updated on
1 min read

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான மூவருக்கு ஆண்மை பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம் புனரியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி(30), அவரது தம்பி காளி என்ற காளீஸ்வரன்(21), உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகியோரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கடந்த 3-ம் தேதி இரவு பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.

காலில் காயமடைந்த இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் இருந்து, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.

கடந்த 17-ம் தேதி கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில், பாதிக்கப்பட்ட மாணவி கைது செய்யப்பட்ட மூவரையும் தனித்தனியாக அடையாளம் காட்டினார்.

அதேபோல, அவரது ஆண் நண்பரும் அடையாளம் காட்டினார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூவரின் ரத்த மாதிரி, உயிரணு ஆகியவை சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆய்வுக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட உடைகள், தடயங்கள் ஆகியவையும் சென்னை தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in