

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதி அருகில் நேற்று முன்தினம் இரவு ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குற்றாலம் போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (48) என்பது தெரியவந்தது. இவர், வீரவநல்லூரில் மாவு வியாபாரம் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாடகை நிலையம் நடத்தி வந்தார்.
சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அசோக் (29) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். வீரவநல்லூரைச் சேர்ந்த கோழி இறைச்சி கடைக்காரர் மணிகண்டன் (30) உட்பட 3 பேர் தனது காரில் ராம்குமாரை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்களை இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து, குற்றாலத்தில் மது போதையில் இருந்த மணிகண்டன், வீரவநல்லூரில் டெய்லர் கடை நடத்தி வரும் கவுதம் (22) மற்றும் 17 வயது சிறுவன் என 3 பேரை குற்றாலம் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
ராம்குமார் அடிக்கடி தன்னை கேலி செய்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை குற்றாலத்துக்கு காரில் அழைத்துச் சென்று, விடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும், மது போதையில் இருந்த ராம்குமாரை விடுதி அருகே அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு, விடுதியில் தூங்கியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.
சீவலப்பேரியில் கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் மார்ட்டின் ஸ்டான்லி (40). கேபிள் டிவி ஆபரேட்டர் தொழில் மற்றும் கார் வாங்கி விற்கும் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்.
இந்நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவில் சீவலப்பேரி பகுதிக்கு வந்திருந்தார். அங்குள்ள தோணித்துறை சுடுகாடு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் மார்ட்டின் ஸ்டான்லி கம்பு மற்றும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சீவலப்பேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மார்ட்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.