

தினேஷ்குமார், வினித்ராஜ்
ஆவடி: ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், காமராஜர் நகர் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்துக்காக இப்பகுதிகளில் பல மின் இணைப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், துணை மின் நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் இருந்து 18 பியூஸ் கேரியர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர் பகுதிகளில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளில் கடந்த 10 நாட்களில் 9 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, புதிய பியூஸ் கேரியர்களை பொருத்தி மின் விநியோகம் சீராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் பியூஸ் கேரியர்கள் திருட்டு தொடர்பாக, பட்டாபிராம் உதவி செயற்பொறியாளர் கார்த்தி கணேஷ் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து 27 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டது தொடர்பாக, சென்னை, அம்பத்தூர்- சூரப்பட்டு மாதனாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த தினேஷ்குமார் (19), வினித்ராஜ் (20) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தினேஷ்குமார், வினித்ராஜ் ஆகியோர் பியூஸ் கேரியர்களை திருடி, அதிலிருந்த காப்பர் வயர்களை விற்பனை செய்ததும், அவர்கள் மீது சென்னை, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பியூஸ் கேரியர்கள், இரு சக்கர வாகனங்கள் திருடியது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பியூஸ் கேரியர்களை திருடும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.