இளைஞரின் இருசக்கர வாகனம் பறிப்பு: சென்னையில் ‘போலி போலீஸ்’ நபர் கைது

இளைஞரின் இருசக்கர வாகனம் பறிப்பு: சென்னையில் ‘போலி போலீஸ்’ நபர் கைது
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து போலீஸ் எனக் கூறி இளைஞரின் இருசக்கர வாகனத்தை பறித்து தப்பிய போலி போலீஸ் கைது செய்யப்பட்டார்.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவர் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோயம்பேடு 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர், தான் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சங்கரிடம் இருசக்கர வாகனத்துக்கான ஆவணங்கள் உள்ளதா என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருகிறாரா என்றும் விசாரித்தார்.

பின்னர், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததாக கூறிய அந்த நபர், வாகனத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்தார். மேலும், இருசக்கர வாகனத்தை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்வதாகவும், அங்கு வந்து வாகனத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு சங்கரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.

இதனை உண்மை என நம்பிய சங்கர், பின்னர் கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது, அவரது இருசக்கர வாகனம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஆவடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் சிக்கினார். அவரை போலீஸார் கைது செய்து, சங்கரிடம் இருந்து பறித்துச் சென்ற இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

விசாரணையில், சம்பவத்தன்று ரமேஷிடம் வீட்டுக்குச் செல்வதற்கு இருசக்கர வாகனம் இல்லாததால், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சங்கரை வழிமறித்து, தான் போலீஸ் எனக்கூறி வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், ரமேஷ் இதேபோல் போலீஸ் எனக்கூறி வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரின் இருசக்கர வாகனம் பறிப்பு: சென்னையில் ‘போலி போலீஸ்’ நபர் கைது
‘சாத்தனூர் அணையில் இருந்து குழாய்களில் குடிநீரை எடுத்து வர அனுமதி தேவை’ - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in