சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில், சென்னையில் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் வசித்து வருபவர் விஸ்வநாதன் மகாதேவன் (58). இவரது தாய்மாமா கணபதி என்பவருக்கு சொந்தமாக சென்னை கொளத்தூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. கணபதிக்கு வாரிசு கிடையாது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். இதை தெரிந்து கொண்ட மோசடி நபர்கள் சிலர் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்தனர்.
இதையறிந்த மகாதேவன் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் நில மோசடியில் ஈடுபட்டது, சென்னையைச் சேர்ந்த இரு சகோதரிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.