திருவள்ளூர்: ரியல் எஸ்டேட் வியாபாரிகள் என வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் இருவர் சிறைப்பிடிப்பு

Updated on: 
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திருவூரில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் என வீட்டுக்குள் நுழைந்த திருவொற்றியூர் போலீஸார் இருவரை பொதுமக்கள் சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே உள்ள திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீதர்பாபு. நேற்று இரவு ஸ்ரீதர்பாபு வீட்டுக்குள் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் என கூறிக்கொண்டு 4 நபர்கள் நுழைந்து சென்னை, போரூர் பகுதியில் உள்ள வீட்டுமனைக்கான ஆவணத்தை காண்பிக்குமாறு கூறி, விலை பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்ரீதர் பாபு வீட்டுமனை ஆவணத்தை காட்டியபோது, அதனை பிடுங்கியவர்களில் இருவர் நாங்கள் திருவொற்றியூர் போலீஸார் என கூறிய நிலையில், மற்ற இருவர் நில ஆவணத்தை எடுத்துக்கொண்டு காரில் ஏறி அதிவேகமாக தப்பிவிட்டனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த ஸ்ரீதர்பாபு, கத்தி கூச்சலிட்டதால் கிராம பொதுமக்கள் திரண்டு, மற்ற இருவரை சிறைப்பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி, வெள்ளவேடு குற்றப்பிரிவ இன்ஸ்பெக்டர் முத்தமிழ், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், பொதுமக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த இருவர், திருவெற்றியூர் காவல் நிலைய போலீஸார் என்பதும், திருவெற்றியூர் காவல் நிலையத்தில் நில சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நில ஆவணத்தை பெற ஸ்ரீதர்பாபு வீட்டுக்கு வந்ததும் தெரிய வந்தது.

பிறகு, ஸ்ரீதர்பாபு மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்திய செவ்வாப்பேட்டை உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், திருவொற்றியூர் போலீஸார் இருவரை பாதுகாப்பாக காவல் துறை வாகனத்தில் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, நில ஆவணத்துடன் தப்பியோடிய இருவர் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்: ரியல் எஸ்டேட் வியாபாரிகள் என வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் இருவர் சிறைப்பிடிப்பு
“ஞானேஷ் குமார் வெளியேறுவார்; இந்த அரசும் வெளியேறும்” - ராகுல் காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in