

சுரேஷ், பாலமுருகன், வினோத்
திருத்தணி: முருகம்பட்டு கிராமத்தில் சிறுவனைக் கொன்று ஆட்டுப் பண்ணையில் புதைத்த வழக்கில் மேலும் இருவரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே முருக்கம்பட்டு பகுதியில், திருத்தணி, எம். ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வந்தார்.
இங்கு பணிபுரிய திருத்தணி, இந்திரா நகரை சேர்ந்த வினோத், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தன் உறவினரான வெண்ணிலா மற்றும் அவரது 3 மகன்களை அனுப்பி வைத்துள்ளார். அங்கு வெண்ணிலா, தன் 3 மகன்களுடன் தங்கி, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15), சரிவர ஆடு மேய்க்கவில்லை எனக் கூறி, அவரை ஆட்டு பண்ணை உரிமையாளர் பாலமுருகன் கடுமையாக தாக்கியதில் சுரேஷ் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பாலமுருகன், வெண்ணிலாவின் உறவினர் வினோத்தின் உதவியுடன், சுரேஷின் உடலை பண்ணை வளாகத்தில் புதைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அதன் மேல் சிமென்ட் தரை போல் பூசி மறைத்துள்ளார்.
இதுகுறித்து, சுரேஷின் தாய் வெண்ணிலா கடந்த 10-ம் தேதி அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், நேற்று முன் தினம் பாலமுருகன், வினோத் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, பண்ணையில் புதைக்கப்பட்ட சுரேஷின் உடல் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டியெடுக்கப்பட்டு, வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் முன்னிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சுரேஷ் கொலைக்கு, பாலமுருகன் மனைவி புவனா (40), அவரது மகளான 15 வயது சிறுமி ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில், நேற்று புவனா, 15 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இதில், சிறுமி காவல் நிலைய முன்ஜாமீனில் விடப்பட்டார். தொடர்ந்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பாலமுருகன், வினோத், புவனா ஆகியோரை போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.