

சென்னை: விரைவாக தங்க நகை தயாரித்து தருவதாக ரூ.2.60 கோடி தங்க கட்டி பெற்று மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, ஜஸ்டிஸ் பண்டலை சாலை பகுதியில் வசிப்பவர் பீமாராஜ் லோதா (61). தங்க நகை ஏற்றுமதி, வியாபாரம் செய்து வருகிறார். இவரது அறிமுகமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபாத் மைதி, தனது பட்டறையில் 3 முதல் 4 நாட்களிலேயே தங்க நகைகளை தயாரித்து விரைவாக தருவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஜூலை 15-ம் தேதி ரூ.2.60 கோடி மதிப்புடைய 200 பவுன் (1,603 கிராம்) தங்கக் கட்டியை அவரது மேலாளர் புத்தாதேவ் புனியாவிடம் பீமாராஜ் லோதா ஒப்படைத்தார். ஆனால், நகைகளை தயாரித்து தராமல் காலம் தாழ்த்திய பிரபாத் மைதி, பின்னர் செல்போன் அழைப்பையும் ஏற்காமல் தலைமறைவானார். இதுகுறித்து பீமாராஜ் லோதா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கோயம்பேட்டில் பதுங்கியிருந்த மேற்கு வங்கம் மிட்னிபூரைச் சேர்ந்த பிரபாத் மைதி (32), சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மைதி (42) ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், மோசடி செய்த தங்கத்தில் ஒரு பகுதியை சஞ்சய் மைதியிடம் பிரபாத் மைதி கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், யானைகவுனி பகுதியில் தங்க நகை வியாபாரிகளிடம் இதே பாணியில் பிரபாத் மைதி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 346 பவுன் தங்க கட்டிகள் (2,768 கிராம்) பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடைய புத்தாதேவ் புனியா ஏற்கெனவே மற்றொரு தங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.