

புதுச்சேரி: பிம்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை தொடர்பான புகார் பற்றி ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரி சுகாதாரத்துறை குழு நேற்று விசாரணையை தொடங்கியது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இரு எக்ஸ்ரே டெக்னீஷியன்கள் போக்சோ வழக்கில் கைதானதாக போலீஸார் தெரிவித்தனர். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் ‘அலையடு ஹெல்த் சயின்ஸ்’ படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக ளுக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் இருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கல்லூரி உள்புகார் குழு விசாரணை நடத்தி, ஒருவரை பணி நீக்கம் செய்தது. மற்றொரு ஊழியரை இரு மாதங்கள் பணியிடை நீக்கம் செய்து விட்டு, பின்னர் மாணவிகளுக்கு தொடர்பு இல்லாத வகையில் கல்லூரி மருத்துவமனைக்கான நகரப் பகுதி மருத்துவப் பிரிவுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டெக்னீ ஷியன் அண்மையில் மீண்டும் கல்லூரிக்கு பணிக்கு வந்ததை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டித்தும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எக்ஸ்ரே ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யக்கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகார் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்த தையடுத்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதாரத்துறை குழு நேற்று கல்லூரியில் விசாரணை நடத்தியது.
இதுபற்றி சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆளுநர் உத்தரவுப்படி சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், இணை இயக்குநர் மேரி ஜோசபின் சித்ரா, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதன்மையர் அய்யப்பன், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறை தலைவர் வல்சடயானா, சுகாதாரத்துறை கண்காணிப் பாளர் ராஜசேகர் ஆகியோர் தனியார் மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடத்தினர்.
அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிக ளிடம் பாலியல் சம்பவம் தொடர் பாக விசாரணை தொடங்கினர். இந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து சுகாதாரத்துறை செயலர் மூலமாக ஆளுநரிடம் விரைவில் தாக்கல் செய்ய இருக்கின்றனர்" என்று தெரிவித்தனர்.
மாணவிகள் புகார் தொடர்பாக காலாப்பட்டு போலீ ஸாரிடம் விசாரித்தபோது, "புகாரைத் தொடர்ந்து காலாப்பட்டு திவாகர் (32), தமிழகப் பகுதியைச் சேர்ந்த சரவணன் (36) ஆகியோர் போக்சோ சட்டத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட் டனர். இவர்கள் இருவரும் எக்ஸ்ரே டெக்னிஷியன்கள் ஆவர்” என்று தெரிவித்தனர்.