

மனோகரன், கவுதம்
ஆவடி: போரூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக மாங்காடு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று கோவூர் தைலந்தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்துக் கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள்
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (24), மாங்காடு, பொன்னாம்பாள் நகரைச் சேர்ந்த மனோகரன்(21) என்பதும், போதை மாத்திரைகளை மும்பையிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.