

தருமபுரி: தருமபுரியில் மதுபான கூடத்தை அகற்றக் கோரி தவெக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காவலர் ஒருவரின் கையை தவெக உறுப்பினர் ஒருவர் கடித்தார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், அவரை பாலக்கோடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதியதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மதுபான கூடத்தை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். திடீரென தனியார் மதுபான கடையை அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தவெக உறுப்பினரான ஜெமினி என்ற நபர், காவலர் ஒருவரின் கையை கடித்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் கைது செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி ராஜசுந்தர் தலைமையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தவெகவினர் கலைந்து செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்புடைய 12 பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் காவலரின் கையை கடித்த ஜெமினி மற்றும் ஜெயபிரகாஷ், கணேஷ், கிருஷ்ணன் ஆகியோர் கைதாகி உள்ளனர்.