

சென்னை: வேலை தேடி சென்னை வந்த சேலம் இளைஞர் மெரினாவில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தயானந்தன் (29). இவர், கடந்த 16-ம் தேதி சேலத்தில் இருந்து வேலை தேடி சென்னை வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் நடைபாதை அருகே பேக்கில் செல்போன், மணி பர்ஸ், ஆகியவற்றை கரையில் வைத்துவிட்டு, கடலில் குளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, கடல் அலையில் சிக்கி, ஆழமான பகுதியில் இழுத்துச் செல்லப்பட்டவர் சிறிது நேரத்தில் சடலமாக கரை ஒதுங்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மெரினா போலீஸார் சம்பவ இடம் விரைந்து தயானந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணை
தயானந்தன் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.