

விஜய்குமார்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சென்னை பெரம்பூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சங்கர் (37). அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார் (30). சன்னாநல்லூரைச் சேர்ந்தவர் சக்தி (21). இவர்கள் 3 பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், பணி நிமித்தமாக ஈரோட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 3 பேரும் காரில் அரியலூர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். காரை சக்தி ஓட்டினார்.
பெரம்பலூர் டி.களத்தூர் பிரிவு சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மைய தடுப்புச் சுவரில் ஏறி, எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில், 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டனர். தகவலறிந்து வந்த பெரம்பலூர் ஊரக போலீஸார், உடல்களை பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காரை ஓட்டி வந்த சக்தி கண் அயர்ந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.