

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த சரவணன் (24), சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சர்வராக பணி செய்து வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு அண்ணா நகருக்கு பைக்கில் சென்றார்.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியா அருகே அவரை வழிமறித்த திருநங்கைகள் ரூ.5 ஆயிரத்தை ‘ஜிபே’ மூலம் பறித்துக் கொண்டு தப்பினர். சரவணன் அந்த வழியாக ரோந்து பணியிலிருந்த நுங்கம்பாக்கம் போலீஸாரிடம் இது தொடர்பாக முறையிட்டார்.
ஆனால் அவர்களோ உன் மீதுதான் சந்தேகம் உள்ளது எனக்கூறி, அவர்களும் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை எனக் கூறியதால், அவரை அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு அழைத்துச் சென்று ரூ.15,000 எடுக்க வைத்து பறித்தனர்.
இதையடுத்து சரவணன் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார். இதை அறிந்த காவல் ஆணையர் அருண் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஓட்டல் சர்வரிடம் போலீஸார் பணம் பறித்து பங்கிட்டுக் கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த போலீஸார் காஜா மொய்தீன், ரத்தினம்,விக்னேஷ் ஆகிய 3 பேரை இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.