திருவான்மியூர் கொலை வழக்கு: கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

திருவான்மியூர் கொலை வழக்கு: கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: திருவான்மியூரில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொடூரக் கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 9 பேரை குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, திருவான்மியூரை சேர்ந்த எழுமலை என்பவர் தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இருவர் வழக்கு விசாரணை நடத்துக்கொண்டு இருந்தபோதே உயிரிழந்துவிட்டனர். மீதம் இருந்த 14 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மீதம் இருந்த 14 பேரையும் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி குற்றச்சாட்டை ஆதாரப் பூர்வமாக நிரூபித்தார்.

அதையடுத்து, இந்த வழக்கின் சாட்சிகளையும் தடயங்களையும் மீண்டும் மறு ஆய்வு செய்த நீதிபதிகள், கொலையை நேரில் பார்த்த பலியான எழுமலையின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்கு மூலங்கள் மிகவும் நம்பகத் தன்மையுடன் இருப்பதாக சுட்டிக்காட்டினர். சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி, திட்டமிட்டு கொலை செய்த கும்பலை விடுவிக்க முடியாது என்று கூறி, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 9 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. இதில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஸ்டீபன் ராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய சரவணன், அப்பு, குருமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர்களை உடனடியாக கைது செய்து, வரும் பிப்ரவரி 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர். அவர்களுக்கு அன்றைய தினம் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவான்மியூர் கொலை வழக்கு: கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
புதுச்சேரியில் ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in