

தினேஷ்குமார்
சென்னை: டிபன் கடை உரிமையாளரின் வீட்டில், தினமும் சவாரிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநரே பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு, கேபி பார்க்பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வி (37). இவர்கள் மாலை நேர டிபன் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 19-ம் தேதி மாலை செல்வி தனது கணவர் மற்றும் மகளுடன் வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றார்.
வியாபாரத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.46 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த செல்வி இதுகுறித்து பேசின் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பவ இடத்தைசுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில்துப்பு துலக்கப்பட்டது.
இதில், செல்வி வீட்டில் திருட்டில் ஈடுபட்டது சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ் குமார், செல்வியின் குடும்பத்துக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர் என்பதும், தினமும் செல்வியை, அவரது ஆட்டோவில் கடையில் இறக்கி விட்டு, வியாபாரம் முடிந்த பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்றும், செல்வியை கடைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு திரும்பி வந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ்குமாரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.