

சென்னை: ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வானகரம், மேட்டுக்குப்பம், தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்திபாபு (35). இவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, பிரபல நிறுவனத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான தானியங்கி கதவுகள் தொடர்பான டெண்டர் வர உள்ளதாகவும், அந்த டெண்டரை பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்காக முதலில் பிணைத் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி, பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் செய்துள்ளார்.
சைபர் கிரைம் பிரிவில் புகார்
பின்னர் அந்த நபரை தொடர்புகொள்ள முடியாததால், தான் மோசடிக்கு ஆளானதை உணர்ந்த ஜெயந்திபாபு, கடந்த மார்ச் 11-ம் தேதி சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மோசடியில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் பயன்பாட்டாளர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகிலிகிட்டா மகேஷ் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தெலங்கானா மாநிலம் சென்று, அங்குள்ள மொய்னாபாத் போலீஸாரின் உதவியுடன், மெடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மோகிலிகிட்டா மகேஷை கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்து வந்தனர்.
ரூ.2.75 லட்சம் கமிஷன்
போலீஸாரின் விசாரணையில், கைதான மோகிலிகிட்டா மகேஷ் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்ததும், மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபருக்கு தனது வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்ததும் தெரியவந்தது.
புகார் அளித்த ஜெயந்திபாபுவிடமிருந்து வந்த ரூ.12.70 லட்சத்தை பெற்று, அதனை பிரதான மோசடி கும்பலிடம் ஒப்படைத்ததற்காக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கமிஷன் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.