நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தந்தைக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக சிபிசிஐடி தகவல்

கவின் | கோப்புப் படம் 

கவின் | கோப்புப் படம் 

Updated on
1 min read

மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை நடந்தபோது, வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் சம்பவ இடத்தில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சுர்ஜித்தின் தாயாரும் காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியும் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சரவணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘கொலை சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன்.

ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை கொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 30-ம் தேதியிலிருந்து சிறையில் உள்ளேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘மனுதாரர் ராஜபாளையம் பட்டாலியனில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று மனுதாரர் பணியில் இருந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அதோடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார்.

சிபிசிஐடி தரப்பில், ‘மனுதாரர் சம்பவம் நடந்த நாளில் பணியில் இல்லை. விடுமுறையில் இருந்திருக்கிறார். கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மனுதாரர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறப்பட்டது.

கொலையான கவின் தாயார் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘மனுதாரரின் தலையீடு காரணமாக எனது புகார் தாமதமாகவே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் கூடுதல் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ.27-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

<div class="paragraphs"><p>கவின் | கோப்புப் படம்&nbsp;</p></div>
தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in