

சென்னை: பெரம்பூரில் சூட்கேஸில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, திருமணத்தை மீறிய உறவால் மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் இருந்த ஒரு சூட்கேஸில் இளைஞரின் சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். இதில், கொலை செய்யப்பட்டவர் சென்னை தேனாம்பேட்டையில் வசித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் அலி (30) என்பது தெரியவந்தது.
அமீர் அலியை அவரது மனைவி ரோகிமா (31) தனது ஆண் நண்பரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்லாம் (31) என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து, ரோகிமா கூறியதாக போலீஸார் தெரிவித்ததாவது: அமீர் அலி எனக்கு 2-வது கணவர்.
வட மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தங்கும் இடவசதி செய்து தரும் தொழிலை கணவருடன் செய்து வந்தேன். என் கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்தது.
நான் கண்டித்தும் என் பேச்சை கேட்கவில்லை. என்னை அடிக்கடி கொடூரமாக அடித்து துன்புறுத்தினார். அவரது நடவடிக்கைகளை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
உறவுக்கு இடையூறாக
இந்நிலையில்தான் அஸ்லாமுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் கண்டித்தார். இதனால், நாங்கள் இருவரும் ஓடிச் சென்று வேறு இடத்தில் கணவன், மனைவியாக வாழலாம் என நினைத்தோம். அந்த திட்டத்தை பின்னர் கைவிட்டோம்.
எங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். சம்பவத்தன்று அமீர் அலி போதையில் இருந்தார். அவருக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கச் செய்தேன். அவர் மயங்கியதும் நானும், அஸ்லாமும் அவரை கொலை செய்து தலை, கைகள் மற்றும் கால்களை துண்டு துண்டாக வெட்டினோம்.
உடலின் நடுப்பகுதியை மட்டும் சூட்கேஸில் அடைத்து, ஆட்டோவில் எடுத்துச் சென்று பெரம்பூர் ரயில் நிலைய படிக்கட்டுகளுக்கு அடியில் வீசிவிட்டு சென்றோம். தலை, கால் மற்றும் பாகங்களை செங்கல்பட்டில் ஓடும் ரயிலில் வீசினோம். இதற்கு அஸ்லாம் எனக்கு முழுமையாக உதவினார். இவ்வாறு ரோகிமா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணை மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது. இவர் சொல்வது உண்மையா? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமீர் அலியின் உடல் பாகங்கள் வீசப்பட்டதாக கூறப்படும் இடங்களில் அவற்றை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.