சென்னை | கந்து வட்டி கேட்டு தாக்குதல்: மகன் கைது, தாய் தலைமறைவு
சென்னை: எழும்பூர், சூரம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஜெயகாந்தன் (52). சிந்தாதிரிப்பேட்டையில் நாட்டு மருந்துக் கடை நடத்தி வருகிறார்.
தொழிலை விரிவுபடுத்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரிடம் ரூ.2.80 லட்சத்தை 2 சதவீத வட்டிக்கு சமீபத்தில் கடனாகப் பெற்றார். பின்னர் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.3 லட்சத்து 43,500-ஐ திருப்பிக் கொடுத்துள்ளார்.
ஆனாலும் கடன் பெறும்போது அடமானமாகப் பெற்ற காசோலைகளை தேவி திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி ஜெயகாந்தன் அவரது கடையிலிருந்தபோது, தேவி தன் மகன் ஓசோனுடன் (30) சென்று இரும்புக் கம்பி, பிளாஸ்டிக் பைப்பால் ஜெயகாந்தனை தாக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த ஜெயகாந்தன் ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து ஓசோனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது தாயை தேடி வருகின்றனர்.
