

அரக்கோணம்: தாயை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகனை அரக்கோணம் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு திருவள்ளூர் மாவட்டம் மணவூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம் மணவூர் பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரியின் மனைவி பத்மாவதி (72) என்பது தெரியவந்தது. சேஷாத்திரி மத்திய அரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உயிரிழந்து விட்டார். கணவரை இழந்த பத்மாவதி தனது மகன் பார்த்தசாரதி என்பவரது பராமரிப்பில் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்மாவதிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை குணப்படுத்துவது கடினம் என மருத்துவர்கள் பார்த்தசாரதியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால், பார்த்தசாரதி தனது தாயை பராமரிக்க முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி தனது தாய் பத்மாவதியை சக்கர நாற்காலியில் அமர வைத்து மணவூர் ரயில் நிலைய நடைமேடை அருகே அழைத்து வந்துள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ஏலகிரி விரைவு ரயில், மணவூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது சக்கர நாற்காலியுடன் தனது தாயை ரயில் முன்பு தள்ளியதாக கூறப்படுகிறது. இதில், அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில் அரக்கோணம் ரயில்வே போலீஸார் நேற்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பத்மாவதியை அவரது மகன் பார்த்தசாரதி ரயில் முன்பு தள்ளிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.