

நடராஜன்
சென்னை: மனைவி திட்டிய ஆத்திரத்தில் உடல்நலக்குறைவால் படுக்கையில் கிடந்த தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). இவரது மகன் நடராஜன் (45). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்ததில் ராஜேந்திரனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர் படுக்கையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், ராஜேந்திரனின் மருமகள் எழில் தனது கணவர் மற்றும் மாமனாரை வீட்டில் விட்டுவிட்டு, குழந்தைகளுடன் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்றிருந்தார்.
அவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, ராஜேந்திரன் படுக்கையில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அதே நேரத்தில் அவரது கணவர் நடராஜன் மதுபோதையில் வீட்டில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த எழில், உடனடியாக ராஜேந்திரனை மீட்டு பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தந்தையை மகன் நடராஜனே கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.
உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த ராஜேந்திரன், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றை படுக்கையிலேயே கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மருமகள் எழில் சுத்தம் செய்து வந்ததுடன், இதுதொடர்பாக கணவர் நடராஜனிடம் அடிக்கடி சண்டையிட்டதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த நடராஜன், மனைவி குழந்தைகளுடன் வேளாங்கண்ணி சென்றிருந்த நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்து, படுக்கையில் இருந்த தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.