அருண் ஐபிஎஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் - கூறியது என்ன?

அருண் ஐபிஎஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் - கூறியது என்ன?
Updated on
2 min read

சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், என்னைக் கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளார். எனக்கு டெல்லியில் இருந்து உளவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நான் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளேன்.

கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு, என்னைக் கொலை செய்வதற்காக தென்தமிழகத்தில் இருந்து ஒரு கூலிப்படையை அருண், செல்வநாதரத்தினம் ஐபிஎஸ் மற்றும் வருண்குமார் ஆகியோர் மூலம் பணம் கொடுத்து நியமித்திருந்தனர். அப்போதும் டெல்லியில் இருந்து தகவல் வந்தது. அதன் பின்னர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்து புகார் அளித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்குப் பிறகே கொலைத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்தியாவில் யாருக்கும் நடக்காத கொடுமைகள் எல்லாம் எனக்கு நடந்துள்ளது. வீட்டின் படுக்கையறை, சமையலறை ஆகிய இடங்களில் மலம் மற்றும் சாக்கடை கழிவுகள் கொட்டப்பட்டது. இந்தியாவில் வேறு எங்காவது இது நடந்துள்ளதா? எனக்கு மட்டும்தான் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, உடனடியாக ரோந்து வாகனத்தை அழைத்த போதும், கீழ்ப்பாக்கத்தில் இருந்து வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆனது. இது தொடர்பாக அங்கிருந்த ஆய்வாளரிடம் கேட்டபோது, போக்குவரத்து நெரிசல் காரணம் என பதிலளித்தனர்.

அருண் சட்டம் - ஒழுங்கு பிரிவில் தற்போது இருந்திருந்தால், என் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பேன். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளார். டெல்லியில் இருந்து தகவல் வந்ததன் அடிப்படையில் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வரிடம் நான் மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவேன். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர்.

தமிழக முதல்வரின் கவனத்துக்கு ஓர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஐயப்பன், லஞ்ச ஒழிப்புத் துறையில் அருணுடன் பணியாற்றி வருகிறார். சென்னை காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சந்திரசேகர், அயல் பணியாக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஐயப்பனும் சந்திரசேகரும் இணைந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் மாமூல் வசூலித்து வருகிறார்கள். இது காவல் ஆணையருக்கும், உளவுத் துறைக்கும், முதல்வருக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை. தமிழக முதல்வர் விழித்துக் கொண்டு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஹார்டு டிஸ்க் விவகாரம் தொடர்பாக அரசு ஏன் சீரியஸாக செயல்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. பெயருக்குதான் சிவசங்கர் அமைச்சர். ஆனால் துறையை நடத்தியது செந்தில்பாலாஜிதான். இந்த இருவருக்கும் மேலாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த அதிகாரியை மாற்றாமல் எப்படி ஊழலை கண்டுபிடிப்பார்கள்?

அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் எப்படி திருடப்பட்டன? சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன் மின்வாரியத் தலைவராக இருந்தார். தற்போது அவரே மீண்டும் அதே பொறுப்பில் உள்ளார். அவரை மாற்றாமல் எப்படி ஊழலை கண்டுபிடிப்பது?

ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் முதல் சந்தேகம் ராதாகிருஷ்ணன் மீதுதான் இருந்திருக்க வேண்டும். திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளை ஏன் இந்த அரசு முக்கியப் பதவிகளில் தொடர்ந்து நியமிக்கிறது?

திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகள், ஊழலுக்கு துணைபோனவர்கள் எனக் கூறப்படுபவர்களையே தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கிறார்கள். இதைத்தான் இந்த முதல்வர் விரும்புகிறாரா?

வந்த உடனேயே மின்வாரியத் தலைவரை மாற்ற வேண்டாமா? மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அங்கு சென்று நான்கு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். ஆனால், ஏழைத் தொழிலாளர்களை மட்டுமே நடவடிக்கைக்கு உட்படுத்துகிறார்கள். ஊழலில் ஈடுபட்ட முக்கிய நபர்களை அருகில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ஒரு புகார் இருந்தது. அந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை முழுமையாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது அருண்தான் என குற்றம் சாட்டுகிறேன்.

பல துறைகளுக்கு நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளீர்கள். ஆனால், முக்கியமான லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இப்படிப்பட்ட அதிகாரியை நியமிக்கலாமா? ஊரே இதைப் பற்றி பேசுகிறது. இதை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், எந்த விமர்சனமும் வந்தாலும் கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறோம் என்ற எண்ணத்தில் முதல்வர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

திமுகவின் தலைவர்களையே சில அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நீங்கள் புதியவர்கள். நிர்வாக அனுபவம் இல்லாமல் வந்திருக்கிறீர்கள். அந்தத் தவறை செய்து விடாதீர்கள் என்பதைத்தான் நான் கூறுகிறேன்” என்று சவுக்கு சங்கர் கூறினார்.

அருண் ஐபிஎஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் - கூறியது என்ன?
யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது: சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in