

சென்னை: உடலில் மறைத்து ரூ.11 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கப் பசையை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய விமான ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் நேற்று தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்து அனுப்பினர்.
கடைசியாக, விமானப் பணியாளர்கள் இறங்கி வந்தனர். அதில் 2 ஆண் ஊழியர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான கேப்டனிடம் அனுமதி பெற்று, 2 பேரையும் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இடுப்பு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 9 கிலோ 460 கிராம் தங்கப் பசையை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ.11.5 கோடி மதிப்புள்ள தங்கப் பசை கைப்பற்றப்பட்டது. ‘துபாயில் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு தங்கப் பசையைக் கொடுத்த ஒருவர் சென்னையில் அதை ஒப்படைக்குமாறு கூறினார். அதனால், உடலில் ஒட்டிக்கொண்டு வந்தோம். அவரும் அதே விமானத்தில்தான் சென்னைக்கு வந்தார். விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அவரோடு மேலும் இருவர் தங்கத்தை பெற்றுக் கொள்ள காத்திருக்கின்றனர்’ என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து, ஓட்டலுக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். விமான பயணி மற்றும் அவருடன் இருந்த 2 பேரையும் கைது செய்தனர். 5 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.