கோப்புப் படம்
நெய்வேலியில் போலீஸாரை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு
விருத்தாசலம்: அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியைப் பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸாரை அரிவாளால் வெட்டினார். இதையடுத்து, போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். அவருக்கும், நெய்வேலி மாற்றுக்குடியிருப்பைச் சேர்ந்த சுபாஷ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், ரமேஷ் கடைக்கு நேற்று முன்தினம் சென்ற சுபாஷ்கர், ரமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சுபாஷ்கரை தேடி வந்தனர். அவர் நெய்வேலி அடுத்த இருப்பு கிராமத்தில் முந்திரித்தோப்பில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று, சுபாஷ்கரைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது சுபாஷ்கர் அரிவாளால் காவலர்கள் வெங்கடாசாலம், வைத்தியநாதன் ஆகியோரை வெட்டினார். மேலும், காவல் ஆய்வாளரையும் தாக்க முயன்றார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜயகுமார் சுபாஷ்கரின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
பின்னர், சுபாஷ்கர் மற்றும் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. ஜெயக்குமார், என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் வெங்கடாசலம், வைத்தியநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரவுடி சுபாஷ்கர் மீது கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் என 9 வழக்குகள் நிலுவயைில் உள்ளன” என்றார்.
