

சென்னை: காசிமேடு பழைய மீன் ஏலக்கூடம் அருகே இளைஞர் ஒருவர், பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ராயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டவர் காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி சனி என்ற தீபாத் (30) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீஸாரின் விசாரணையில், தீபாத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் சமாதானம் பேசுவதாகக் கூறி தீபாத்தை சந்தித்த ஜெய், அவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பழைய மீன் ஏலக்கூடம் அருகே வைத்து கத்தியால் தீபாத்தை படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவான ஜெய்யை போலீஸார் தேடி வருகின்றனர்.
மருந்து விற்பனை பிரதிநிதி கொலை
திருவொற்றியூர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பவித்ரன் (32). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். மேலும், தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு, விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நண்பர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அருகில் கஞ்சா போதையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (22), ஹரி என்ற ஆனந்தன் (24), கிஷோர் (22) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பவித்ரன், பாலாஜியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவித்ரனை சரமாரியாக வெட்டினார்.
மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த பவித்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகராறைத் தடுக்க முயன்ற பவித்ரனின் நண்பர் மதன் (22) என்பவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியை கைது செய்தனர். தலைமறைவான ஹரி என்ற ஆனந்தன், கிஷோரை தேடி வருகின்றனர்.
கைதான பாலாஜி மீது ஏற்கெனவே கொலை முயற்சி, போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.