

செல்வ முருகன்
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே பிரபல ரவுடியான ‘தூத்துக்குடி செல்வம்’ என்ற ‘துப்பாக்கி செல்வம்’ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 27-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் – சரஸ்வதி தம்பதியின் மகனான செல்வமுருகன், ‘தூத்துக்குடி செல்வம்’, ‘துப்பாக்கி செல்வம்’ என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
41 வயதான இவர், கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள கரும்பாட்டூர் கிராமத்தில், தனது மனைவி கல்பனா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவரது தந்தையை அரிவாளால் வெட்டிய தாக கூறப்படும் நாராயண மூர்த்தியை, தனது 19-வது வயதில் கொலை செய்ததாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஏ பிளஸ்’ என்ற கேட்டகிரி ரவுடியாக அவர் வகைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 27-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடைபெற்ற பணம் பறிப்பு வழக்கில் செல்வமுருகனை போலீஸார் தேடி வந்த நிலையில், சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் அவரை பிடிக்க முயன்றபோது, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை கத்தியால் தாக்கியுள்ளார். இதையடுத்து போலீஸார் துப்பாக்கியால் செல்வமுருகனின் காலில் சுட்டு அவரை கைது செய்திருந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
கடந்த 2 மாதங்களாக திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈத்தங்காடு பகுதியில், தனது தாய் சரஸ்வதியின் வீட்டில் செல்வமுருகன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் கூடங்குளம் அருகே சங்கநேரியில் உள்ள தங்கள் தோட்டத்துக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் செல்வமுருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து நேற்று காலையில் அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
செல்வ முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.