

சென்னை: கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்து கொள்வதாக கூறி 97 பவுன் நகை, ரூ.42 லட்சம் பணம் ஏமாற்றிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பாகாயத்தை சேர்ந்தவர் பிரேமா (41) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட மணலி புது நகர் காவல் நிலைய குற்றப் பிரிவில் பணி யாற்றி வருகிறார். இவரது கணவர் துணை ராணுவத்தில் பணியாற்றி கடந்த 2016ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் 2024ம் ஆண்டு பணிபுரிந்த போது அங்கு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சிவ ராமன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண் காவலரின் கணவர் இறந்த விஷயம் தெரிந்த சிவராமன் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது வங்கிக் கணக்கு முடங்கி உள்ளதாக கூறி ரூ.2 லட்சம், அவ்வப்போது நகை மற்றும் பணத்தை சிவராமன் வாங்கி வந்ததாகவும் மொத்தம் 97 பவுன் நகை, ரூ.42 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் பெண் காவலருடன் சிவராமன் 6 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளார். சிவராமனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெண் காவலர் தான் கொடுத்த நகை, பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பெண் காவலர் தொடர்ந்த வழக்கில் ராயபுரம் போலீஸார் ரவுடி சிவராமன், அவரது தாயார், மனைவி உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது சிவராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.