கோவை: மளிகை வியாபாரியை கடத்தி நகை, காசோலைகள் பறிப்பு: போலீஸார் போல நடித்த 4 பேர் தலைமறைவு

கோவை: மளிகை வியாபாரியை கடத்தி நகை, காசோலைகள் பறிப்பு: போலீஸார் போல நடித்த 4 பேர் தலைமறைவு
Updated on
1 min read

தனிப்படை போலீஸார் போல நடித்து மளிகை வியாபாரியைக் கடத்தி நகை, வங்கிக் காசோலைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் எஸ்.முத்துவேல் (35). இவர் தனது தாய் மற்றும் சகோதரர் முத்துராஜா குடும்பத்தினருடன் போத்தனூர் எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவரும் தனித்தனியாக மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

கடந்த 4-ம் தேதி மாலை முத்துவேல் தனது கடையில் இருந்துள்ளார். அப்போது காரில் முத்துவேலின் கடைக்கு வந்த 4 பேர், தங்களை தனிப்படை போலீஸார் என கூறிக்கொண்டு, தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்துள்ளனர். அங்கு எதுவும் சிக்காததால், அருகில் உள்ள முத்துராஜா கடையில் சோதனை நடத்தி புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி முத்துராஜாவை காரில் ஏற்றிச் சென்றனர். அதோடு முத்துவேலை இருசக்கர வாகனத்தில் பின்தொடருமாறும் தெரிவித்துள்ளனர். மதுக்கரை மார்க்கெட் அருகே கரை நிறுத்தி, ரூ.3 லட்சம் அளித்தால் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டு விடுவதாக தெரிவித்துள்ளனர். முத்துவேல் பணத்தை தயார் செய்ய முற்பட்டுள்ளார். அதற்குள் முத்துராஜாவை காரில் வீட்டுக்கு மீண்டும் அழைத்து வந்த அவர்கள், வீட்டிலிருந்த வங்கிக் கணக்கு புத்தகம், கையெழுத்திட்ட 50 எண்ணிக்கையிலான வங்கிக் காசோலைகள், ஏடிஎம் அட்டை மற்றும் அதற்கான ரகசிய எண், 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மீண்டும் காரில் முத்துராஜாவை அழைத்துக்கொண்டு சென்றனர்.

அன்றைய தினம் இரவு போத்தனூர் எல்ஐசி காலனி அருகே முத்துராஜாவை இறக்கி விட்டு சென்றனர். முத்துவேல் அங்கு சென்று சகோதரரை அழைத்து வந்த பிறகே, வந்தவர்கள் போலீஸார் இல்லை என்பது தெரியவந் தது. இதையடுத்து, முத்துவேல் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in