

சென்னை: புழல் வட்டாட்சியர் அலுவல கம் அருகே முட்புதரில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, புழல், பாலாஜி நகரில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இந்த அலுவலகத்தைச் சுற்றி அடர்ந்த முட்புதர்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்களில் ஒருவர், முட்புதருக்குள் சந்தேகத்துக்கிடமான வகையில் சில பொருட்கள் கிடப்பதைக் கண்டுள்ளார்.
உடனே அவர் புதர் அருகே சென்று பார்த்தபோது, மரக்கட்டைகள் அடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. முதலில் அவை சாதாரண மரக்கட்டைகள் என நினைத்தவருக்கு, கூர்ந்து கவனித்த பிறகே அவை அபூர்வமான செம்மரக்கட்டைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, உடனடியாக புழல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அங்குள்ள கருவேல மரத்தின் அடியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 அடி நீளமுள்ள 15 செம்மரக்கட்டைகளை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தடை செய்யப்பட்ட இந்தச் செம்மரக் கட்டைகளைப் புதரில் பதுக்கி வைத்தது யார் ? சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா ?
போலீஸார் தீவிர விசாரணை: வேறு எங்காவது கடத்துவ தற்காக இங்கு தற்காலிகமாகப் பதுக்கி வைக்கப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி கேமரா ஆய்வு: மேலும், குற்றவாளிகளை அடையாளம் காணச் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அலுவலகத்தின் அருகிலேயே செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.