

புதுச்சேரி: டியூசன் மாஸ்டர் மீது பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற தனியார் துணிக்கடை கேஷியரின் வலது கை சிதைந்தது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். லாஸ்பேட்டை கபிலன் நகரில் டியூசன் சென்டர் நடத்திவருகிறார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு டியூசன் முடிந்து, பயிற்சி மையத்தை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்வதுபோல வந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, பிரேம்குமார் மீது வீசினார்.
இதில் அவர் தப்பி அங்கிருந்து ஓடினார். பின்னால் துரத்திச் சென்று அந்த நபர் நாட்டு வெடிகுண்டை பிரேம்குமார் மீது வீச முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நபரின் வலது கையிலேயே வெடிகுண்டு வெடித்தது. இதில், அவரின் வலது கை சிதைந்தது.
சத்தம்கேட்டு அருகிலிருந்தவர்கள் லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து அந்த நபரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடமிருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டு, அரிவாளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில், வெடிகுண்டு வீசிய நபர் புதுவை ரெயின்போ நகரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ரவீந்தரனின் மகள் பிரேம்குமாரிடம் டியூசன் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்ல வரும்போது பிரேம்குமாருடன் ரவீந்திரனின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கருதியுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு தற்போது அவர் மனைவி தனியாக வசித்து வருகிறார். இந்தப் பிரச்சினைக்கு பின்னரும் அவர்கள் பேசி வருவதாக வந்த தகவலால் பிரேம்குமாரை கொலை செய்ய ரவீந்திரன் திட்டமிட்டுள்ளார்.
அவரே பட்டாசுகளை வாங்கி இரு நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார். இதில் தப்பினால் வெட்ட அரிவாள் ஒன்றையும் தயாராக வைத்துள்ளார். சில நாட்களாக டியூசன் சென்டர் மூடும் நேரம் வரை கண்காணித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மழைப் பொழிவால் மாணவர்கள் சற்று தாமதமாக சென்ற பிறகு, பிரேம்குமார் மட்டும் தனியாக டியூசன் சென்டரை மூடுவதைப் பார்த்து, கொலை செய்ய முயன்று ரவீந்திரனே காயமடைந்துள்ளார். இவ்வாறு தெரிவித்தனர்.