

சென்னை: கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கர்ப்பமாக்கி, திருமணம் செய்து மறுத்ததால் அம்மாணவி தீக்குளித்து இறந்தார். இதற்கு காரணமான போலீஸ்காரருக்கு போக்சோ வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை போலீஸ்காரரான மகேஷ் (33), சென்னை புழல் சிறை கண்காணிப்பாளரின் தனிப் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கும், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணான கல்லூரி மாணவி ஒருவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பெண்ணை காதலிப்பதாக கூறிய மகேஷ், ஒரு கட்டத்தில் வீடியோ கால் மூலமாக அந்த மாணவியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். பின்னர் மாணவியை கோவளம் பகுதியில் உள்ள கடற்கரை தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கவும் மகேஷ் வற்புறுத்திஉள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 2020 நவ.19-ம் தேதி வீட்டில் தீக்குளித்தார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 2 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறக்கும் முன்பாக தனது நிலைமைக்கு மகேஷ் தான் காரணம் என வாக்குமூலம் அளித்து இருந்தார்.
தனது மகளின் இறப்புக்கு காரணமான மகேஷை கைது செய்யக்கோரி மாணவியின் தாயார் எம்கேபி நகர் போலீஸில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் தற்கொலை என பதியப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாபர் முன்பாக நடந்து வந்தது.
சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, இறந்த மாணவியின் மரண வாக்கு மூலத்தை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மகேஷூக்கு இரட்டை கடுங்காவல் ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளி்த்தார்.
மேலும், மாணவியி்ன் தாயாருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.