திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தை சமன் செய்தபோது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதவன் (55). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் அதிகளவில் கற்கள் இருப்பதால் சமன் செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 22-ம் தேதி 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நிலத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தபோது பழங்கால சிறிய குடுவை ஒன்று கிடைத்துள்ளது. இதைப்பார்த்த ஆதவன் குடும்பத்தினர் குடுவையின் மூடியை உடைத்து திறந்து பார்த்தபோது தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சுந்தரம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கந்திலி காவல் நிலைய போலீஸாருக்கு தங்க புதையல் குறித்து ஆதவன் குடும்பத்தினர் நேற்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வட்டாட்சியர் நவநீதனிடம் தங்க நாணயங்கள் அடங்கிய குடுவையை ஆதவன் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். அந்த குடுவையில் 84 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

கடந்த 22-ம் தேதி நிலத்தை சமன் செய்தபோது புதையல் கிடைத்த நிலையில், காலதாமதமாக தகவல் தெரிவித்துள்ளதால் ஆதவன் மீது வருவாய் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், குடுவையின் மூடி உடைந்திருப்பதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கந்திலி க காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், நிலத்தின் உரிமையாளர் ஆதவன் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான ஏஐ புகைப்படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in