

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட க்யூ பிராஞ்ச் சிஐடி போலீஸார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையில், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாக்கம், தர்காஸ் சாலையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பிடிபட்டவர்கள் ஜாகிர் பக்கீர், அப்துல் சலாம் சித்தாரி (71), ஆரிப் சித்தாரி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தின் மோரேல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட க்யூ பிராஞ்ச் சிஐடி ஆய்வாளர் நித்யா தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, உரிய சட்ட நடைமுறைகளின்படி அவர்கள் மூவரையும் சேலத்தில் உள்ள வங்கதேச அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் எந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்தனர், எவ்வளவு காலமாக இங்கு தங்கியிருந்தனர், வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து க்யூ பிராஞ்ச் சிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.