

சென்னை: திருமங்கலம் போலீஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கடந்த 19-ம் தேதி திருமங்கலத்தில் உள்ள பார்க் ரோடு அருகே கண்காணித்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரனை (26) பிடித்து விசாரித்தனர்.
அவரிடமிருந்து போதை ஸ்டாம்ப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தேனாம் பேட்டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்பாளரான முகமது மஸ்தான் சர்புதீன் என்ற சர்புதீன் (44), முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன் (25), வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.27.91 லட்சம், உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சர்புதீன் நடிகர் சிம்புவின் மேலாளராகப் பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் தொடர்பில் இருந்தவர்.
இதனால் யாருக்கெல்லாம் போதைப் பொருள் வழங்கினார் என்பது தொடர்பாக விசாரிக்க சர்புதீனை போலீஸார் அண்மையில் காவலில் எடுத்து விசாரித்தனர்.
எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன? அதில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் யார்? யார்? என்பது தொடர்பாகவும், சர்புதீனிடம் விசாரணை நடத்தப்பட்டு, பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ்(39) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர் சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார். இவர் நடிகர் தனுஷின் சகோதரி மகனை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
மேலும், தினேஷ் ராஜிடம் போதைப் பொருட்களை பெற்று வேறு யாரேனும் பயன்படுத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.