

சேலம்: சேலம்-ஈரோடு ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்த 4 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
சேலம் - ஈரோடு ரயில்வே மார்க்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு ரயில் சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. கொண்டலாம்பட்டி அருகே சென்ற போது ரயில் சக்கரம் பகுதியில் அதிக சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு ரயில்வே பைலட் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, சேலம் ஆர்பிஎப் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ரயில் சக்கரம் ஏறி நசுக்கியதில் கற்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது. தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நங்கவள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் தண்டவாளத்தில் சிறிய கற்களை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 சிறுவர்களையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் சிறுவர்கள் விளையாட்டாக ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்ததும், ரயில் சக்கரம் கற்களை நசுக்கியபடி சென்றதையும் செல்போனில் படம் பிடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் வைத்திருந்த சொல்போனில் கற்களை ரயில் சக்கரம் ஏறி நொறுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆர்பிஎப் போலீஸார் 4 சிறுவர்களையும் எச்சரிக்கை செய்து விடுவித்தனர். மேலும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.