

சென்னை: இந்திய மக்களை குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ‘சிம் பாக்ஸ்’ மையத்தை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை சைதாப்பேட்டையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸ் கருவிகள் மூலம் தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுவதாக சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி இயக்குநர் சரவண குமார் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம்.
இதையடுத்து, சைதாப்பேட்டை விக்னேஸ்வரா கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலும், சைதாப்பேட்டை அப்துல் ரசாக் முதல் தெருவில் உள்ள பெய்ல் டவர்ஸ் கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளில் செயல்பட்டு வந்த அலுவலகங்களிலும் போலீஸாரும், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடத்தினோம்.
அப்போது, உரிய உரிமம் மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் பல சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய சட்டவிரோத தொலைத்தொடர்பு மையம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையில், தலா 64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய 3 சிம் பாக்ஸ் கருவிகள், தலா 32 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய 7 சிம் பாக்ஸ் கருவிகள், 2 கணினி சி.பி.யு.க்கள், 2 சர்வர்கள் மற்றும் 182 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிம் பாக்ஸ் கருவியில் ஒரே நேரத்தில் பல சிம் கார்டுகளைப் பொருத்தி, வெளிநாடுகளில் இருந்து இணையவழியாக மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகளை இந்தியாவில் உள்ள உள்ளூர் செல்போன் எண்கள் மூலம் வருவதுபோல் மாற்றுகின்றனர்.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய மக்களை தொடர்புகொள்கின்றனர். போலீஸ், சி.பி.ஐ. அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து, டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிம் பாக்ஸ் கருவிகள் மற்றும் சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது, அவை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பதிவான 301 சைபர் குற்ற புகார்களுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்தது.
இதில் தமிழகத்தில் பதிவான 52 சைபர் குற்ற புகார்களும் அடங்கும். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மையத்தில் மேலாளராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய சஞ்சய் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது எஸ்.பி.க்கள் சக்திவேல், மீனாட்சி, டி.எஸ்.பி. லிசா ஆகியோர் உடனி ருந்தனர்.