

மருத்துவமனைக்குள் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன்.
சிவகங்கை: தாய் மீது வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யாததால் கத்தியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி ரகளையில் ஈடுபட்டார்.
சிவகங்கை அருகே அரசனிமுத்துப்பட்டி நைனாங்குளத்தை சேர்ந்த மலையாண்டி மகன் பாலகிருஷ்ணன். அவரது தாயார் மல்லிகா, கடந்த ஆக. 25-ம் தேதி பொன்னாகுளம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கண்டறியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு தனது தாயார் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை அரசு மருத்துவமனை வார்டுக்கு வந்து, தான் வைத்திருந்த கத்தியை காட்டி, குற்றவாளியை பிடிக்க முடியாத காவல்துறை எதற்கு எத்தனை நாட்கள்தான் எனது தாயாருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள் என்று கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதைப் பார்த்த நோயாளிகள், பணியாளர்கள் அலறினர். அங்கு வந்த புறக்காவல்நிலைய போலீஸார் பாலகிருஷ்ணனை சமரசப்படுத்தி அங்கிருந்த அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மருத்துவமனை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆர்எம்ஓ முகமதுரபீக் அளித்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணனை கைது போலீஸார் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் வாகனத்தை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. அதற்குள் கத்தியை காட்டி நோயாளிகளிடம் பீதியை ஏற்படுத்தியதால் அவரை கைது செய்தோம் என்றனர்.