

கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காஜிபேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாசுலு மகள் (17) பிளஸ் 2 படித்து வந்தார். இவரை ஆஞ்சநேய கொட்டாலா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை அப்பெண் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் சென்று கத்தியால், கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கடப்பா போலீஸார் அந்த இளைஞரை சம்பவம் நடந்த அன்றே கைது செய்தனர்.
பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், காதலனை வேனில் வேறொரு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்தார். இதனால் வெங்கடேஷை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தற்போது வெங்கடேஷ், காயம் அடைந்த 2 போலீஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.