

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் கே.பி.ஜெபஸ்டியன் தலைமையில், ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழக தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் ஒரு நபர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்தார். அவரது பையை சோதித்தபோது, அதில் ரூ.77,430 ரொக்கம் இருந்தது. ஆனால் இப்பணத்துக்கான ஆவணம் அவரிடம் இல்லை. அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (36) என்பது தெரியவந்தது. அவரையும், பணத்தையும் தமிழக தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுபோல ஹவுராவில் இருந்து திருச்சிக்கு செல்லும் ரயில் எழும்பூருக்கு நேற்று காலை வந்தது. அதில் பொது பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. அதைக் கைப்பற்றி, அண்ணா நகர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, கஞ்சாவை எடுத்து வந்த நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.